நாகூம் 3 – Nahum Chapter 3

Nahum Chapter 3

1 2 3

நாகூம் அதிகாரம் 3

1. இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.

2. சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,

3. வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

4. தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,

5. இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,

6. உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

7. அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி உன்னைவிட்டோடிப்போவான்.

8. நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது.

9. எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லுூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.

10. ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

11. நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய்.

12. உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

13. இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும்.

14. முற்றிக்கைக்குத் தண்ணீர்மொண்டு வை, உன் அரண்களைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண் மிதி, சூளையைக் கெட்டிப்படுத்து.

15. அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.

16. உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்த பச்சைக்கிளிகள் பரவிப் பறந்துபோகும்.

17. உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும் உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம்; பின்பு அவைகள் இருக்கும் இடமின்னதென்று தெரியாது.

18. அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.

19. உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காரியம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =