புலம்பல் 5 – Lamentations Chapter 5

Lamentations Chapter 5

1 2 3 4 5

புலம்பல் அதிகாரம் 5

1. கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

2. எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப்போயின.

3. திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

4. எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.

5. பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

6. அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.

7. எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.

8. அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.

9. வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.

10. பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

11. சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.

12. பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

13. வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.

14. முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.

15. எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.

16. எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

17. அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.

18. பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

19. கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

20. தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

21. கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.

22. எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =