ஏசாயா 16 – Isaiah Chapter 16

Isaiah Chapter 16

ஏசாயா அதிகாரம் 16

1. தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு அனுப்புங்கள்.

2. இல்லாவிட்டால் கூட்டை விட்டுத்துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.

3. நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.

4. மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள்.

5. கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.

6. மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.

7. ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.

8. எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.

9. ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.

10. பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.

11. ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது.

12. மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான்.

13. மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே.

14. ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =