யாத்திராகமம் 37 – Exodus Chapter 37

Exodus Chapter 37

யாத்திராகமம் அதிகாரம் 37

1. பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

2. அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,

3. அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,

4. சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

5. அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.

6. கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.

7. தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

8. ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும், மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.

9. அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது.

10. மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

11. அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,

12. சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,

13. அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுகால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.

14. அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.

15. மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

16. மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.

17. குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.

18. குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.

19. ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.

20. விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.

21. அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.

22. அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.

23. அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.

24. அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.

25. தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

26. அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,

27. அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,

28. சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

29. பரிசுத்த அபிஷேக தைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eighteen =