Exodus Chapter 2
யாத்திராகமம் அதிகாரம் 2
2. அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
3. அவள் அதை அப்புறம் ஒளித்து வைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.
4. அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதன் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
5. அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள். அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டு வரும்படி செய்தாள்.
6. அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
7. அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால் கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.
8. அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டு வா என்றாள். இந்தப்பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
9. பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை வளர்த்தாள்.
10. பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
11. மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
12. அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்.
13. அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி, நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
14. அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
15. பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
16. மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
17. அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
18. அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.
19. அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
20. அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
21. மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
22. அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.
23. சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
24. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.
25. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.