யாத்திராகமம் 1 – Exodus Chapter 1

Exodus Chapter 1

யாத்திராகமம் அதிகாரம் 1

1. எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

2. இசக்கார், செபுலோன், பென்யமீன்,

3. தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.

4. இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங் கூடப்போனார்கள்.

5. யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

6. யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.

7. இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.

8. யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

9. அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.

10. அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.

11. அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

12. ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

13. எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

14. சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

15. அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:

16. நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

17. மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

18. அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

19. அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.

20. இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.

21. மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

22. அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =