உபாகமம் 23 – Deuteronomy Chapter 23

Deuteronomy Chapter 23

உபாகமம் அதிகாரம் 23

1. விதையடிக்கப்பட்டவனும், கோசமாறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

2. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

3. அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

4. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.

5. உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.

6. நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே.

7. ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய்.

8. மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம்.

9. நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.

10. இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,

11. சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.

12. நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்கவேண்டும்.

13. உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.

14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.

15. தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.

16. அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.

17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக் கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக் கூடாது.

18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

19. கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.

20. அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.

21. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.

22. நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.

23. உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.

24. நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.

25. பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + ten =