உபாகமம் 14 – Deuteronomy Chapter 14

Deuteronomy Chapter 14

உபாகமம் அதிகாரம் 14

1. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

2. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

3. அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.

4. நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

5. மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.

6. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;

7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

8. பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

9. ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

10. சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

11. சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.

12. நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

13. பைரியும், வல்லுூறும், சகலவித பருந்தும்,

14. சகலவித காகங்களும்,

15. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,

16. ஆந்தையும், கோட்டானும், நாரையும்,

17. கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,

18. கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.

19. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தாமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.

20. சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.

21. தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

22. நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

23. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

24. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

25. அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

26. அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

27. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

28. மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

29. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =