அப்போஸ்தலருடைய நடபடிகள் 23 – Acts Chapter 23

Acts Chapter 23

அப்போஸ்தலருடைய நடபடிகள் அதிகாரம் 23

1. பவுல் ஆலோசனை சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.

2. அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.

3. அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.

4. சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை வைகிறாயா என்றார்கள்.

5. அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.

6. பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒருபங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று சத்தமிட்டுச் சொன்னான்.

7. அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.

8. என்னத்தினாலென்றால் சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

9. ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.

10. மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.

11. அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமில் சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.

12. விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.

13. இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள்.

14. அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.

15. ஆனபடியினால் நீங்கள் ஆலோசனை சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.

16. இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.

17. அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியமுண்டு என்றான்.

18. அந்தப்படியே அவன் இவனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய் காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான்.

19. அப்பொழுது சேனாபதி அவனுடைய கையைப் பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான்.

20. அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்கமனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனை சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள்.

21. நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேர்க்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான்.

22. அப்பொழுது சேனாபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்தாக ஒருவருக்குஞ் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.

23. பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;

24. பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,

25. ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது:

26. கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:

27. இந்த மனுஷனை யூதர் பிடித்துக்கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.

28. அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனை சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.

29. இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.

30. யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.

31. போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய்,

32. மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.

33. அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன்முன்பாக நிறுத்தினார்கள்,

34. தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:

35. உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + sixteen =