மீகா 1 – Micah Chapter 1

Micah Chapter 1

1 2 3 4 5 6 7

மீகா அதிகாரம் 1

1. யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.

2. சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.

3. இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.

4. மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

5. இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்கு காரணமென்ன? எருசலேம் அல்லவோ?

6. ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.

7. அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.

8. இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

9. அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.

10. அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.

11. சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.

12. மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

13. லாகீசில் குடியிருக்கிறவளே வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.

14. ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.

15. மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.

16. உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப் போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =