எஸ்றா 5 – Ezra Chapter 5

Ezra Chapter 5

1 2 3 4 5 6 7 8 9 10

எஸ்றா அதிகாரம் 5

1. அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

2. அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

3. அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

4. அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

5. ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

6. நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:

7. ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.

8. நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப்போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.

9. அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.

10. இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.

11. அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

12. எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

13. ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.

14. நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

15. அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

16. அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

17. இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =