எசேக்கியேல் 22 – Ezekiel Chapter 22

Ezekiel Chapter 22

எசேக்கியேல் அதிகாரம் 22

1. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,

3. அதை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன்காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரந்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே,

4. நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணி, உன் வருஷங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் புறஜாதிகளுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.

5. உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.

6. இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.

7. உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

8. நீ என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைபண்ணி, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்.

9. இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.

10. தகப்பனை நிர்வாணாமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.

11. உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.

12. இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

13. இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.

14. நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.

15. நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்.

16. நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.

17. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

18. மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.

19. ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் எல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன்.

20. வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.

21. நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.

22. குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.

23. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

24. மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து; நீ சுத்தம்பண்ணப்படாததேசம், கோபத்தின் காலத்தில் மழைபெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.

25. அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.

26. அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்தவஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனவீனம்பண்ணப்படுகிறேன்.

27. அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

28. அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.

29. தேசத்தின் ஜனங்கள் இடுக்கண்செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள்.

30. நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

31. ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =