எசேக்கியேல் 18 – Ezekiel Chapter 18

Ezekiel Chapter 18

எசேக்கியேல் அதிகாரம் 18

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?

3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

5. ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,

6. மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,

7. ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

8. வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து,

9. என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

10. ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,

11. இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,

12. சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,

13. வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

14. பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன்செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

15. மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,

16. ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

17. சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து தன் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

18. அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.

19. இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

21. துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

22. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

24. நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.

25. நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

26. நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.

27. துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.

28. அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

29. இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

30. ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.

31. நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.

32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =