எசேக்கியேல் 12 – Ezekiel Chapter 12

Ezekiel Chapter 12

எசேக்கியேல் அதிகாரம் 12

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

2. மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

3. இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.

4. அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக.

5. சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல புறப்படுவாயாக.

6. அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

7. எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.

8. விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

9. மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

10. இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

11. நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.

12. அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

13. நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

14. அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

15. அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

16. ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.

17. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

18. மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,

19. தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.

20. குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

21. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

22. மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

23. ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப் பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.

24. இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.

25. நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

26. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

27. மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

28. ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twelve =