யாத்திராகமம் 31 – Exodus Chapter 31

Exodus Chapter 31

யாத்திராகமம் அதிகாரம் 31

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2. நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

3. விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,

4. இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,

5. மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.

6. மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

7. ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,

8. மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

9. தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

10. ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,

11. அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

12. மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:

13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

14. ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

15. ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

16. ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.

17. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

18. சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =