யாத்திராகமம் 23 – Exodus Chapter 23

Exodus Chapter 23

யாத்திராகமம் அதிகாரம் 23

1. அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

2. தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

3. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.

4. உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

5. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.

6. உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.

7. கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

8. பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.

9. அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

10. ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.

11. ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.

12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.

13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

14. வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.

15. புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.

16. நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

17. வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.

18. எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

19. உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

20. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

21. அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.

22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

23. என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

25. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

26. கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.

27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =