பிரசங்கி 9 – Ecclesiastes Chapter 9

Ecclesiastes Chapter 9

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

பிரசங்கி அதிகாரம் 9

1. இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

2. எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.

3. எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.

4. இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.

5. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

6. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும் அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.

7. நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.

8. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.

9. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.

10. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

11. நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

12. தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

13. சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று.

14. ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.

15. அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.

16. ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.

17. மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்.

18. யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =