பிரசங்கி 8 – Ecclesiastes Chapter 8

Ecclesiastes Chapter 8

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

பிரசங்கி அதிகாரம் 8

1. ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.

2. ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன், நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.

3. நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே, பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.

4. ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?

5. கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

6. எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

7. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?

8. ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

9. இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

10. பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

11. துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

12. பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

13. துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

14. பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

15. ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

16. நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

17. தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =