பிரசங்கி 10 – Ecclesiastes Chapter 10

Ecclesiastes Chapter 10

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

பிரசங்கி அதிகாரம் 10

1. செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.

2. ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.

3. மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.

4. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

5. நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.

6. மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்தநிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

7. வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.

8. படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.

9. கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.

10. இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.

11. தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.

12. ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.

13. அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.

14. மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?

15. ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.

16. ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!

17. ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.

18. மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.

19. விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

20. ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =