தானியேல் 10 – Daniel Chapter 10

Daniel Chapter 10

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

தானியேல் அதிகாரம் 10

1. பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.

2. அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.

3. அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை. நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.

4. முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,

5. என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.

6. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும் அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும் அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

7. தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

8. நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

9. அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.

10. இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.

11. அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

12. அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

13. பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தாரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.

14. இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.

15. அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

16. அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

17. ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.

18. அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,

19. பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

20. அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

21. சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்கிற வேறொருவரும் இல்லை.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =