Amos Chapter 9
ஆமோஸ் அதிகாரம் 9
1. ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.
2. அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;
3. அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
4. அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
5. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.
6. அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
7. இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
8. இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9. இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.
10. தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.
11. ஏதோமில் மீதியானவர்களையும் என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,
12. அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.
13. இதோ உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள்வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.