1 இராஜாக்கள் 5 – 1 Kings Chapter 5

1 Kings Chapter 5

1 இராஜாக்கள் அதிகாரம் 5

1. சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.

2. அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:

3. என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.

4. ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.

5. ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.

6. ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.

7. ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி;

8. ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.

9. என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.

10. அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக் கொண்டுவந்தான்.

11. சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.

12. கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

13. ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.

14. அவர்களில் ஒவ்வொரு மாத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

15. சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம்பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரபேரும்,

16. இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.

17. வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.

18. ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =