உன்னதப்பாட்டு 5 – Song Of Solomon Chapter 5

Song Of Solomon Chapter 5

1 2 3 4 5 6 7 8

உன்னதப்பாட்டு அதிகாரம் 5

1. என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.

2. நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

3. என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

4. என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.

5. என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.

6. என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.

7. நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்..

8. எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.

9. ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதில் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

10. என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.

11. அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.

12. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.

13. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

14. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

15. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.

16. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =