நியாயாதிபதிகள் 13 – Judges Chapter 13

Judges Chapter 13

நியாயாதிபதிகள் அதிகாரம் 13

1. இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

2. அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

3. கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.

4. ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

5. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

6. அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

7. அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.

8. அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.

9. தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.

10. ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள்.

11. அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.

12. அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

13. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

14. திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

15. அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

16. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

17. அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

18. அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.

19. மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.

20. அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

21. பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

22. தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

23. அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

24. பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

25. அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =