எஸ்தர் 2 – Esther Chapter 2

Esther Chapter 2

1 2 3 4 5 6 7 8 9 10

எஸ்தர் அதிகாரம் 2

1. இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.

2. அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிறவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.

3. அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

4. அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டுமென்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.

5. அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.

6. அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.

7. அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.

8. ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.

9. அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.

10. எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.

11. எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.

12. ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,

13. இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.

14. சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது.

15. மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.

16. அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

17. ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.

18. அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

19. இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.

20. எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.

21. அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.

22. இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.

23. அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =